
சேலம் : தமிழகம் முழுவதும் தொலைதூர அரசு பஸ்களில், 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட கோட்டங்கள் மூலம், முக்கிய நகரங்களுக்கு தொலைதூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிவிரைவு பஸ்களும் பயன்பாட்டில் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வழித்தடங்களில், கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில்தான் பஸ் கட்டணம் குறைவு என்று பெருமை பேசும் தமிழக அரசு, நான்கு ஆண்டுகளாக விழா காலங்களில், மறைமுகமாக கட்டண உயர்வை அமல்படுத்தி, பொதுமக்களை சிரமப்படுத்துகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், போக்குவரத்துக்கு லாயக்கற்ற பஸ்களையும், நீண்ட தூர வழித்தடத்தில் இயக்கி, அதிக கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளது. கோவில் விழாக்கள், சுற்றுலா தலங்கள் செல் லும் பஸ்களிலும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. "சிறப்பு பஸ்' என்ற ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு வலம் வரும் பஸ்களில், ஏறுவதற்கே மக்கள் தயங்குகின்றனர்.
சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், தென்மாவட்ட மக்கள் அதிகம் பேர், தொழில் காரணமாக வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றவர்கள், கோடை விடுமுறை முடிந்து, தொழில் மற்றும் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்துக்கு, பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில், ஐந்து முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து மதுரை, திருப்பூர், கோவை, சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்களில், 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்தள டவுன் பஸ்கள் அனைத்தும், தற்போது, வெளியூர்களுக்கு சிறப்பு பஸ் என்ற பெயரில் விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், "கட்டணம் உயர் வில்லை என கூறிவிட்டு, மறைமுகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டண உயர்வு பற்றி கேட்டால், கண்டக்டர்களும் எரிந்து விழுகின்றனர். தனியார் பஸ்களில் இதுபோன்று இல்லை. "அரசு மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தி வருவது வேதனை ஏற்படுத்துகிறது' என்றனர். தொலைதூர அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் ஒரு கட்டணத்தை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். "எங்களுக்கே குழப்பமாக உள்ளது. கட்டண விவரம் குறித்த பட்டியலை கொடுத்துள்ளனர். அதை பார்த்து, பார்த்து டிக்கெட் கொடுப்பதும் கஷ்டமாக உள்ளது' என்றார்.